Tuesday 30th of April 2024 06:49:37 AM GMT

LANGUAGE - TAMIL
.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்திய தேசிய இராணுவம்! -நா.யோகேந்திரநாதன்!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்திய தேசிய இராணுவம்! -நா.யோகேந்திரநாதன்!


(ஓகஸ்ட் 15ம் திகதி கொண்டாடப்படும் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்புக்கட்டுரை)

“இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டபோது அதன் பிரதம ராயிருந்த அட்லி பிரபுவிடம் 1947ம் ஆண்டுக்கு வெகுகாலம் முன்பே காந்தியின் “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் தோற்றுப் போய் விட்டபின்பு பிரிட்டன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற சூழ்நிலை இல்லாதபோதும் ஏன் அப்படி நடந்தது எனக் கேட்கப்பட்டபோது அவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவம் இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசின் அடித் தளத்தையே பலவீனப்படுத்தி விட்டது. அத்துடன் சிப்பாய் கலவரம் என அழைக்கப்படும் இந்தியக் கப்பற்படைக் கலகத்தால் இந்திய ஆயுதப் படைகள் மீது இனியும் நம்பிக்கை வைக்க முடியாது என்பதை பிரிட்ஷ்சார் உணர்ந்து விட்டனர். மேலும் 1942ல் காந்தி்யால் முன்னெடுக்கப்பட்ட “வெள்ளையனே வெளியேறு“ இயக்கம் பிரிட்டன் வெளியேறுவது என்ற முடிவில் வெகு குறைந்தளவு செல்வாக்கையே செலுத்தியது“ என என்னிடம் அவர் தெரிவித்தார். எனவே சட்டமறுப்பு இயக்கம் இந்திய சுதந்திரத்தை வழிநடத்தியது என்பதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. இந்தியா சுதந்திரமடைவதற்கு கிட்டத்தட்ட 14 வருடங்கள் முன்பே காந்தியின் பிரசாரங்கள் நீர்த்துப் போய் விட்டன. முதலாம் உலகப் போரின் போது ஆயுதக் கிளர்ச்சிகள் மூலம் நாட்டை விடுதலை செய்ய ஜெர்மனியின் உதவியை இந்தியப் புரட்சியாளர்கள் கோரினர். ஆனால் அது வெற்றி பெறவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது இதே முறையைப் பின்பற்றி இந்திய தேசிய இராணுவத்தை சுபாஷ் சந்தி்ரபோஸ் உருவாக்கினார். இந்திய சுதந்திரப் போர் என்பது ஐரோப்பாவில் ஹிட்லராலும் ஆசியாவில் ஜப்பானாலும் மறைமுகமாக பிரிட்டனுக்கு எதிராகப் போர் புரிவதாக இருந்தது. இவை எதுவும் நேரடியாக வெற்றி பெறாத போதிலும் இந்தியாவுக்குச் சுதந்தி்ரம் பெற்றுத் தந்த மூன்று காரணங்களின் ஒட்டுமொத்த விளைவுதான் இது.

இந்திய தேசிய இராணுவத்தின் மேல் மேற்கொள்ளப்பட்ட தேசத்துரோக விசாரணைகளின்போது வெளிப்பட்டவை மற்றும் அவை அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது ஏற்கனவே போரினால் வலுவிழந்து போயிருந்த பிரிட்டனை வெளியேறும் முடிவை எடுக்க வைத்தது. இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைப்பதற்கு இந்தியச் சிப்பாய்களின் விசுவாசத்தை நம்பியிருக்க முடியாது என்ற நிலையிலேயே இந்தியாவை விட்டு வெளியேறுவது என்ற முடிவுக்கு பிரிட்டன் வந்தது”.

இது கல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.வி.சக்கரபர்த்தி பிரிட்டிஷ் பிரதமர் அட்லியைச் சந்தித்து உரையாடிய பின்பு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளாகும்.

இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தின்போது இந்திய தேசிய இராணுவம் அரக்கான் காடுகள், பர்மா ஆகிய பிரதேசங்களில் ஜப்பானியப் படையினரின் உதவியுடன் பிரிட்டிஷ் படைகளின் எதிர்ப்பை முறியடித்து இக்பால், கொஹிமா ஆகிய பகுதிகளை முற்றுகையிடுகிறது. அதே நேரத்தில் மெங்கோலியா ஊடாக ரஷ்யா ஜப்பானை நோக்கி முன்னேறிய நிலையில் ஜப்பான் படைகள் பின் வாங்குகின்றன. போதிய ஆயுத விநியோக வசதிகள் இல்லாத நிலையில் மணிப்பூர் வரை முன்னேறியிருந்த இந்திய தேசிய இராணுவம் தோல்வியைச் சந்திக்கிறது.

1946 பெப்ரவரியில் கைது செய்யப்பட்ட ஐ.என்.ஏ. வீரர்கள் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்படுகிறது. விசாரணைகள் இந்திய மக்களை உணர்வு கொண்டு பொங்கியெழ வைக்கின்றன. டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவத்தினருக்குக் கூட்டாக மரண தண்டனை வழங்கப்படுகிறது.

இவ்வழக்கும் விசாரணைகளில் வெளிவந்த விடயங்களும் சுதந்திரப் போராளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளும் இந்திய மக்கள் மத்தியில் மட்டுமின்றி பிரித்தானியப் படைகளிலுள்ள இந்திய சிப்பாய்கள் மத்தியிலும் கொதி நிலையை ஏற்படுத்துகின்றன. இராணுவ முகாம்களில் கலகங்கள் வெடிக்கின்றன.

இவற்றின் உச்சமாக எழுச்சி பெற்றதுதான் பம்பாய் கப்பற்படைப் புரட்சி.

இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட கொடிய தண்டனைகளை அடுத்து பம்பாய் எம்.ஐ.என். அக்பர் கடற்படைத் தளத்தில் 1946 பெப்ரவரி 18ல் புரட்சி வெடிக்கிறது. முகாம் கடற்படை வீரர்களால் கைப்பற்றப்பட்டதுடன் பிரிட்டிஷ் அதிகாரிகள் தாக்கப்பட்டு விரட்டப்படுகின்றனர். பம்பாய் துறைமுகம்

கைப்பற்றப்பட்டு காங்கிரஸ், முஸ்லிம் லீக், பொதுவுடைமைக் கட்சி என்பவற்றின் கொடிகள் ஏற்றப்படுகின்றன. பிரிட்டிஷ் கொடி இறக்கப்படுகிறது. 78 கப்பல்கள் 20 கடற்படைத் தளங்கள் படை வீரர்களின் கட்டுப்பாட்டில் வருகின்றன. 20,000 வீரர்கள் பங்கு கொள்கின்றனர். பம்பாய் தொட்டு விசாகபட்டினம் வரையுள்ள துறைமுகங்கள் கைப்பற்றப்படுகின்றன.

அதேவேளையில் பம்பாய், கல்கத்தா, லாகூர், டில்லி ஆகிய நகரங்களில் கடற்படைப் புரட்சியை ஆதரித்து பொது வேலை நிறுத்தம் இடம்பெறுகிறது. பிரித்தானிய படைகளின் நகர்வுகளுக்கு மக்கள் இயன்றளவு தடைகளை ஏற்படுத்துகின்றன.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறிய ஆட்சியாளர்கள் சீன எல்லையிலும் பர்மாவிலும் நின்ற படையினரைக் கொண்டு வந்து சுற்றி வளைப்புகளை மேற்கொள்கின்றனர். மூன்று நாட்கள் இடம்பெற்ற கடும் சண்டைகளின் பின்பு முகாம்கள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன. இப்புரட்சி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஒரு செய்தியைத் தெளிவாகச் சொல்லி வைக்கிறது. அதாவது இந்தியர்களைக் கொண்ட தங்கள் படையால் இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைத் தொடர முடியாது என்பதுதான் அது.

எனவே பிரித்தானியப் பேரரசு இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவது என்ற முடிவுக்கு வருகிறது. எனவே தங்களுக்கு ஆபத்தில்லாத காந்தி தலைமையிலான தங்கள் விசுவாசிகளான காங்கிரஸிடம் ஒப்படைப்பதாக முடிவெடுகின்றனர்.

இந்தியத் தேசிய காங்கிரசின் அதிகாரம் மோதிலால் நேரு, டாட்டா, பிர்லா, மிஸ்ரா போன்ற பெரும் தனவந்தர்கள் கையிலேயே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1885ல் சுரேந்திர பானர் தலைமையில் கூடிய 73 பிரதிநிதிகள் இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை உருவாக்கினர். இவர்கள் பிரித்தானிய அரசின் விசுவாசிகளாகவும் தங்கள் தேவைகளைக் கோரிக்கைகளாகவும் பிரிட்டிஷ் அரசுப் பிரதிநிதிகளிடம் முன் வைப்பவர்களாகவும் இருந்தனர். இந்தப் போக்குகளை வெறுத்த பாலகங்காதர திலகர் சுதந்திரம் எனது பிறப்புரிமை நாம் அதை அடைந்தே தீருவோம் என முழங்கினார். 1882ல் லாகூரில் இடம்பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றிய சுதேசி சமித்தின் பத்திரிகை ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.

1907ல் காங்கிரஸ் இரண்டாகப் பிளந்தது. சுயராஜ்யக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் திலகர் தலைமையில் இணைகின்றனர். இவர்களில் பிபின் சந்திரபாலர், அரவிந்தர், லாலா லஜபதிராம், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா போன்றவர்கள் முக்கியமானவர்களாகும்.

1902ல் பாலகங்காதர திலகர் மூட்டிய சுயராஜ்யத் தீ எங்கும் பரவியபோது சுதந்திரம் வேண்டி நின்ற வீரர்களால் அனுசீலன் சமித்தி என்ற அமைப்பு உருவாக்கப்படுகிறது. உடற் பயிற்சிக் கழகங்கள் என்ற போர்வையில் கல்கத்தா, டக்கா ஆகிய நகரங்களில் கிளைகள் அமைக்கப்பட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இது வெள்ளை அதிகாரிகள் மேல் தாக்குதல் தொடுப்பது, வங்கிக் கொள்ளைகள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இது மெல்ல மெல்ல கிராமப் புறங்களுக்கும் பரவுகிறது. 1906ல் அரவிந்தர், புரேந்திரதத், ராஜா சுமேந்தர், அனுசீலன் சமிதியின் ஒரு பகுதியாக யுகாந்தர் அமைப்பை உருவாக்குகின்றனர். ராஜ்பிகாரிபோஷ் இதில் இணைந்து கொள்கிறார். அலிகார் குண்டு வெடிப்பு, பிரபல வங்கிக் கொள்ளைகள் என்பன இவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றுள் ராஜ்பிகாரி போஷை இணைப்பாளராகக் கொண்ட இந்தோ – ஜேர்மன் சதி நடவடிக்கை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அமெரிக்கா, கனடா, மியன்மார், சிங்கப்பூர், மலேஷியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான் எனப் பல்வேறு நாடுகளிலும் உள்ள பஞ்சாபியர்கள் கதர் கட்சி என்ற ஒரு அமைப்பை உருவாக்குகின்றனர். கதர் கட்சியுடன் தொடர்பை ஏற்படுத்திய ராஜ்பிகாரி போஸ் இந்திய தேசியப் படை ஒன்றை ஹந்தலானுடன் இணைந்து ஜெர்மனியில் உருவாக்குகிறார். 1914ல் “தொம்கா தாமாறு” என்ற கப்பல் மூலம் ஆயுதங்களுடன் 400 வீரர்கள் கல்கத்தா நோக்கி வருகின்றனர். அதேவேளையில் ராஜ்பிஹாரிபோஷ் சகல பிரிட்டிஷ் இராணுவ முகாம்களிலுள்ள தேசப்பக்த படையதிகாரிகளுடன் தொடர்கொண்டு ஒரு புரட்சிக்கான தயாரிப்புகளில் ஈடுபடுகிறார். ஹர்தலான் தலைமையில் துறைமுகத்தில் இறங்கிய 400 வீரர்களும் பிரித்தானியப் படைகளால் சுற்றி வளைக்கப்படுகின்றனர். இம்மோதலில் ஒரு பகுதியினர் கொல்லப்பட பல வீரர்கள் ஆயுதங்களுடன் நாட்டுக்குள் ஊடுருவி ஏற்கனவே திட்டமிட்டபடி குறிப்பிட்ட இடங்களை அடைந்து விடுகின்றனர். அதேவேளையில் அவர்களின் உதவியுடன் 21.02.1915ல் பிரித்தானிய இராணுவ முகாம்களில் புரட்சியைத் தொடக்கத் திட்டம் வகுக்கப்படுகிறது. கர்பால் சிங் என்பவனின் காட்டிக் கொடுப்பால் பஞ்சாபில் உள்ள இரு முகாம்களில் பிரிட்டிசார் கைது நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றனர். இதன் காரணமாக திட்டமிட்ட திகதிக்கு முன்பாகவே ஏனைய முகாம்கள் முழுமையாகத் தயாராகாத நிலையிலேயே புரட்சியை தொடங்க வேண்டி நிலை எழுகிறது. ஒரு வார காலத்திலேயே புரட்சி தோற்கடிக்கப்பட்டு பல தளபதிகளும் படை வீரர்களும் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள்.

ஏற்கவே அலிப்பூர் குண்டு வெடிப்புத் தொடர்பாக 3 வருடங்களாகத் தேடப்பட்டு வந்த ராஜ்பிகாரி போஷைக் கைது செய்ய பிரிட்டிஷ் உளவாளிகள் பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் அவர் ஜப்பானுக்குத் தப்பி ஓடுகிறார்.

ஒரு தேசிய இராணுவம் இல்லாமல் இந்திய விடுதலை சாத்தியமில்லை என்பதை உணர்ந்த ராஜ்பிகாரிபோஷ் ஜப்பான், ஆப்கானிஸ்தான், பர்மா ஆகிய நாடுகளில் வசித்த இந்திய தேசபக்தர்களை ஒன்றிணைத்து ஜப்பான் அரசாங்கத்தின் உதவியுடன் இந்திய தேசிய இராணுவத்தை அமைக்கிறார். தங்கள் போருக்கு பயன்படுத்தும் நோக்குடன் எல்லா உதவிகளையும் ஜப்பான் செய்கிறது. இந்திய தேசிய இராணுவம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இயங்காது என்பதைப் புரிந்து கொண்ட ஜப்பான் ஒரு கட்டத்தில் அதைக் கலைத்து வருகிறது. ஆனாலும் ஜப்பானின் உதவி இல்லாமலே அதை போஸ் கட்டுக்குலையாமல் வழி நடத்தினார்.

இரண்டாவது உலகப் போரில் பிரிட்டன் இந்தியாவைத் தனக்கு உதவியாக இழுத்து விட்டதை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தை இயக்கத்தை காங்கிரஸ் கட்சியில் உள்ளிருந்தோரும் வெளியில் இருந்தோரும் நடத்தக் கோரினர். ஆனால் காந்தி பிரிட்டனின் சாம்பலிலிருந்து தான் சுதந்திரத்தைப் பெற விரும்பவில்லை எனத் தெரிவித்து ஒத்துழையாமைக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டார். அந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சுபாஷ் காந்தியின் முடிவை எதிர்த்து காங்கிரஸிலிருந்து வெளியேறி “வோவேட் ப்ளொக்” என்ற கட்சியை அமைத்தார். 1940ல் பிரித்தானிய அரசு அவரை வீட்டுக் காவலில் வைத்தது. அங்கிருந்து தப்பிய சுபாஷ் சந்திரபோஸ் பர்மா, ஆப்கானிஸ்தான் ஊடாக ஜெர்மனியை அடைந்தார். ஜெர்மனியின் உதவியுடன் ஏற்கனவே ஜெர்மனியால் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த இந்தியப் படை வீரர்களை விடுவித்து இந்திய தேசிய இராணுவம் ஒன்றை உருவாக்கினார். ஏற்கனவே ஜப்பானில் இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கியிருந்த ராஜ் பிகாரி் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு சுபாஸ் சந்தி்ரபோஸுக்கு அழைப்பு விடுத்தார்.

ஜப்பான் வந்த சுபாஷ் ஜப்பானின் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த போர்க் கைதிகளையும் விடுவித்து மலேசியாவில் இந்திய தேசிய இராணுவத்தை முறைப்படி பிரகடனம் செய்தார்.

இந்திய தேசிய இராணுவம் ஜப்பான் அந்தமான் தீவுக் கூட்டத்தைக் கைப்பற்றும் போரில் ஜப்பானுடன் இணைந்து இறங்குகிறது. இந்த நிலையில் ஜப்பான் அந்தமான் – நிக்கோபார் தீவுகளை சுபாஷிடம் ஒப்படைக்கிறது.

அந்தமானின் “ஆசாத் இந்து” என்ற போரில் சுபாஷ் சந்திரபோஸினால் இந்தியச் சுதந்திர அரசு பிரகடனப்படுத்துகிறது.

இன்னொருபுறம் பர்மா ஊடாக மணிப்பூர் எல்லைவரை முன்னேறிய இந்திய தேசிய இராணுவம், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு ஏற்பட்ட தோல்வி காரணமாக ஜப்பான் பின்வாங்கிய நிலையில் தோல்வியைச் சந்திக்க வேண்டிய நிலை எழுகிறது.

இப்போரில் கைது செய்யப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தினரும் படை வீரர்களும் மரண தண்டனை உட்படக் கடும் தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

அதன் காரணமாகவே கடற்படைப் புரட்சி வெடிக்கிறது. பம்பாயில் ஆரம்பித்த பொது வேலை நிறுத்தம் நாடு முழுவதும் பரவுகிறது. விமானப் படையினரும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் குதிக்கின்றனர். சென்னை, பூனா, கோட்டைக் காவற்படையினர் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு எதிராகத் திரும்புகின்றனர்.

இவ்வாறு நிலைமை மோசமடையவே பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியப் படைகளைக் கட்டுப்படுத்த முடியாது என உணரப்பட்ட நிலையிலேயே இந்தியாவை விட்டு வெளியேறுவது என முடிவெடுக்கிறது.

புரட்சிகர நடவடிக்கைகள் மூலம் தோல்வியடைந்தால் பிரி்ட்டனின் நலன்களுக்கு விரோதமானவர்கள் கையில் அதிகாரம் சென்று விடுமாதலால் தமது விசுவாசமான காங்கிரஸ் தலைமையிடம் ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டு பிரிட்டன் வெளியேறியது.

இறுதிப் போரில் இந்திய தேசிய இராணுவம் தோல்வியைச் சந்தித்த போதிலும் அத் தோல்வியே மாபெரும் சக்தியாக புரட்சியைச் தோற்றுவித்து பிரிட்டன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தியது.

இந்திய விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்த திலகர், அரவிந்தர், பிபின் சந்திரபாலன், வ.வே.சு.ஐயர், லாலாலஜபதிராய், சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா மற்றும் ராஜ்பிகாரி போஷ், பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், சூரியா சென், ப்ரீதி லதா, கல்பனா தத் போன்ற ஆயிரமாயிரம் விடுதலை வீரர்களின் சித்திரவதைகளுடன் கூடிய சிறைவாசத்தாலும் உயிர் அர்ப்பணிப்புகளாலும் எழுச்சி பெற்ற சுதந்திரப் போர் அதன் உச்ச கட்டமாக சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசிய இராணுவமாகப் பரிணமித்து வெள்ளையரை இந்தியாவை விட்டு வெளியேறும் நிலையை உருவாக்கியது.

வெள்ளையர் தங்கள் நலன்கள் பாதிக்கப்படாமல் இருக்க நாட்டை காங்கிரஸிடம் ஒப்படைத்தனர். ஆனால் இந்திய இன்னும் உண்மையான சுதந்திரத்தினைப் பெறவில்லையே என்றே பலராலும் கருதப்படுகிறது. இங்கே ஒரு இந்தியக் கவிஞரின் கவிதையை நினைவுபடுத்துவது பொருத்தமாயிருக்கும்.

”நள்ளிரவில சுதந்திரத்தைப் பெற்றோம்

இன்னும் விடியவில்லை”

இக்கவிதை இந்தியா சுதந்திரம் பெற்றும் அது ஒரு குறுகிய மேற் தட்டு வர்க்கத்தின் கையைச் சென்றடைந்தது என்பதையும் சாதாரண மக்களுக்குக் கிடைக்கவில்லை என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்.

15.08.2021


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE